×

பொதுமக்களிடையே தட்டுப்பாடு போக்க ரூ.5க்கு தானியங்கி இயந்திரத்தில் முகக்கவசம்: ராணிப்பேட்டை கலெக்டர் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ₹5க்கு தானியங்கி இயந்திரத்தில் இருந்து முகக்கவசம் பெறும் வசதியை கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று தொடங்கி வைத்தார். உலகையை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும். வெளியே செல்லும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் முகக்கவசங்கள் தரத்திற்கு ஏற்ப ₹10 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிலர் குறைந்த விலைக்கு முகக்கவசங்கள் வாங்கி, அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.  இந்நிலையில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக ₹5 நாணயம் போட்டு முகக்கவசம் வாங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ₹5 நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தி, முகக்கவசத்தை பெற்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், அலுவலக மேலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

ராணிப்பேட்டை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் சார்பில் தொழில் நுட்ப ஆலோசகர் முரளி, சங்க தலைவர் சந்திரகாசன், செயலாளர் புனிதவேல், இணை செயலாளர் சண்முகநாதன் மற்றும் மனோகரன் ஆகியோர் கொண்ட குழுவினரால் இந்த தானியங்கி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்குழுவினர் கூறுகையில், ‘முகக்கவசம் தட்டுப்பாடு போக்க தானியங்கி முகக்கவச இயந்திரம் ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி இயந்திரத்தில் ₹5 நாணயம் அல்லது 5 ஒரு ரூபாய் நாணயங்களை போட்டால் உடனே முகக்கவசம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஏழை, எளிய மக்கள் அனைவரும் தரமான முகக்கவசம் பெறலாம்’ என்றனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் குறைந்த விலையில் முகக்கவசம் வழங்கும் இயந்திரம் பயன்பாடு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Tags : RM 5 FOR AUTOMOTIVE MACHINE , RANKPET COLLECTOR, STARTS , AUTOMOTIVE MACHINE, RM 5
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஓரிரு...